“All roads lead to Rome” – ஏழாவது படிக்கும் போது முதல் முறையா பழமொழி தமிழாக்கம் பாடத்துல கேள்விப்பட்டது. அது எப்படி முடியும்? எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற முட்டுச்சந்துல போனா கூட ரோமாபுரி வருமான்னு கேட்டு அடி வாங்கும் போது எனக்கு தெரியாது 20 வருடம் கழிச்சு நானும் ரோமாபுரி போகும் ஒரு சாலையில் பயணம் போவேன்னு. அந்த வயசுல அர்த்தம் புரியலைனாலும் உள்ளங்கை செவக்க வாங்குன அடியால மனசுல நல்லா பதிஞ்சு போச்சு.
லண்டன், பாரிஸ், ஜெனீவா, வியன்னா இன்னமும் பல மேற்கு ஐரோப்பிய நகரங்களில் இப்பவும் நிலைச்சு நிக்குற பல பிரம்மாண்டமான கட்டிடங்களில் ரோமாபுரி கட்டிடக்கலை தாக்கம் இருக்கும். அதே மாதிரி அத்தனை ஐரோப்பிய அருங்காட்சியகத்திலும் ரோமாபுரி பேரரசு காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் இல்லாம இருக்காது.
இது எல்லாத்துக்கும் மூலாதாரமான ரோமாபுரி எவ்வளவு பிரமிப்பா இருக்கும்? அதை பத்தி ஆயிரக்கணக்கான பதிவுகள் இணையம் முழுக்க கொட்டி கெடக்கு. அதனால நான் அத பத்தி சொல்ல போறது இல்ல. என்னுடைய முதல் ரோமாபுரி பயணம் எனக்கு அதே ஏழாவது படிக்கும் போது படிச்ச இன்னொரு பழமொழியை ஞாபகபடுத்துச்சு – “Rome was not built in a day”
8800 செய்யுள் மஹாபாரத இதிகாசம் கூட ஒரு வார்த்தைல இருந்து தான் தொடங்கி இருக்கும். அதே மாதிரி பல நாடுகள் பல நூற்றாண்டுகள் பறந்து விரிந்து ஆதிக்கம் செய்த ரோமாபுரி பேரரசும் ஒரு நாள் ஒரு சின்ன ஊரில் தொடங்கினது தான். அந்த சுவாரஸ்யமான தொடக்க கதை மட்டும் தான் உங்களுக்கு சொல்ல போறேன். இந்த கதைல இருக்குற சில நிகழ்வுகள் உங்களுக்கு வேற ஏதாவது கதையை ஞாபகப்படுத்தினா, எங்க இருந்து யார் சுட்டதுன்னு ஆராய்ச்சி பண்ணாம கதையை மட்டும் கேளுங்க, இல்லை பல ஆயிரம் பாகம் தூரத்துல இருந்த இரண்டு இனங்கள் எப்படி ஒரே மாதிரி கதைகளையும் நாயகர்களையும் உருவாக்கி இருப்பாங்கன்னு சிந்திங்க. இதோ அந்த கதை உங்களுக்காக…
ஏறத்தாழ 2800 வருடத்துக்கு முன்னாடி ஆல்பா லோங்கா (Alba Longa) தேசத்தை ஆட்சி செய்தார் அரசர் நுமிடோர் (Numitor). அவருடைய தம்பி அமுலியஸ் (Amulius) அண்ணனை கைது செஞ்சு, அவர் மகனை கொன்னு நாட்டை தனக்கு சொந்தமாக்கிட்டார். நுமிடோர் மகள் ரியா சில்வியாவை (Rhea Silvia) அவங்க கடவுள் வெஸ்டாவின் (Vesta) கோவிலில் சன்னியாசி ஆகிட்டார். வெஸ்டா கோவிலில் இருக்கும் பெண்கள் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணவோ அனுமதி கிடையாது. ரியாவுக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தை ஆட்சில பங்கு கேட்டு வரக் கூடாதுனு தான் இந்த ஏற்பாடு. ஆனால் விதி வலியது.
அப்பாவை பிரிந்து, அண்ணனை இழந்து துயரப்படும் ரியாவை பார்த்து மனமிரங்கிய கடவுள் செவ்வாய் (Mars, god of war), அவளுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள் தர்மத்தை நிலைநாட்ட ஆசி வழங்குகிறார். சில நாட்களில் ரியா கர்ப்பமானது அரசர் அமுலியஸ் காதுக்கு போய் சேருது. அமுலியஸ் ரியாவை சிறையில் அடைக்கிறார். அவளுக்கு பிறக்கும் இரட்டையர்கள் தன்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார்கள்னு அசிரீரி (அங்கேயும் இருந்திருக்காங்க போல!) சொல்ல கேட்டு, குழந்தைகள் பிறந்ததுமே தன் பாதுகாவலன் கிட்ட குடுத்து டைபர் (Tiber) ஆத்துல வீசிட்டு வர சொல்றாரு. அந்த பாதுகாவலன் இரட்டையர்களை ஒரு மரக்கூடைல வெச்சு கரை புரண்டு ஓடுற டைபர் ஆத்துல வீசிடுறார். இந்த குழந்தைகள் கடவுள் செவ்வாய் வழி வந்தவர்கள்னு தெரிஞ்சிகிட்ட ஆற்றுக்கடவுள் டைபரினஸ் (Tiberinus) இரட்டையர்களை லுபெர்க்கால் (Lupercal) குகை பக்கத்துல கரை சேர்க்கிறார்.
அதே நேரத்தில அங்க தன் குட்டிகளை இழந்த ஒரு ஓநாய், இரட்டையர்களை நதிக்கரையில் இருந்து கொண்டு போய் தன் குகையில் பால் கொடுத்து வளர்த்துச்சு (கால்பந்தாட்ட ரசிகரா இருந்தீங்கனா இடது பக்கம் இருக்குற புகைப்படத்தை A.S Roma அணியோட கொடியில் பாத்து இருக்கலாம்). சில நாட்கள் கழித்து அந்த பக்கமா வந்த ஆடு மேய்ப்பாளன் பாஸ்டுலஸ் (Faustulus) மரக் கூடையையும் இரட்டையர்களையும் பாத்து யாருன்னு தெரிஞ்சிக்கிட்டு வீட்டுக்கு கொண்டு போய் ரோமுலஸ் (Romulus), ரீமஸ் (Reemus) என்று பேர் வெச்சு சொந்த பிள்ளைகளா வளர்த்தார். ஆடு மேய்ச்சு வளந்தாலும் இரட்டையர்கள் ரத்தத்தில் அரச பரம்பரை குணாதிசயங்கள் ஊறி கிடந்தது. அவர்கள் வாலிப பருவம் அடைந்த போது இருவரையும் பின்தொடர ஒரு ஊரே தயாரா இருந்தது.
தன் சகாக்களோடு ஒரு நாள் இருவரும் நாட்டு நடப்பை பத்தி விவாதித்து கொண்டு இருந்தார்கள். அமுலியஸ் ஆட்சியில் நடக்கும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் அவர்கள் கண்டிக்கும் வகையில் பேசுவதை கேட்டு அங்க இருந்த படை வீரர்கள் சினமடைகிறார்கள். இரண்டு குழுக்களுக்கும் காரசாரமான விவாதம் உருவானது. வாய் பேச்சு கைகலப்பு ஆக, இரட்டையர்கள் தலைமையில் வாலிப பட்டாளம் படை வீரர்களை வெளுத்து வாங்கி வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வர சொல்லி அனுப்பிடறாங்க. இந்த விஷயம் அரசர் அமுலியஸ்க்கு தெரிய வர, அவர்களை கைது செய்ய சொல்லி ஒரு பெரிய படையை ஏவி விடுகிறார். எதிர் பார்க்காத நேரத்தில் நிராயுதபாணியா இருக்கும் ரீமஸை கைது செஞ்சு ஆல்பா லோங்கா தலைநகரத்துக்கு இழுத்துட்டு போயிடுது அந்த படை.
இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் கோபத்தில் சகோதரனை மீட்க சகாக்களை கூட்டிட்டு கிளம்பும் ரோமுலஸை தடுத்து இரட்டையர்கள் பூர்வீகத்தை பாஸ்டுலஸ் சொல்கிறார். அதே நேரத்தில் ரீமஸ் குடும்பத்தை பற்றி ஒரு ஒற்றன் மூலம் தெரிந்து கொண்ட அமுலியஸ், ஒரு வேலை ரியாவின் மகனாக இருக்குமோனு சந்தேகபடுகிறார். தன் சந்தேகத்தை தீர்க்க ரீமஸை நுமிடோர் மாளிகைக்கு ஒரு ஒற்றனோடு அனுப்புகிறார். நுமிடோர் மூலமா தன் தாயை பற்றியும் அமுலியஸ் செய்த கொடுமைகளையும் தெரிந்து கொண்ட ரீமஸ், மீண்டும் தாத்தாவை அரசனாக்க சபதம் எடுக்கிறான்.
அமுலியஸ் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ரீமஸ், நுமிடோர், அவருடைய ஆதரவாளர்கள் ஒரு திசையில் இருந்து தாக்க, ரோமுலஸ் தன் சகாக்களோடு இன்னொரு திசையில் இருந்து தாக்கினார்கள். போர் கடவுள் செவ்வாய்க்கு பிறந்த பிள்ளைகளை யுத்தத்தில் வீழ்த்திவிட முடியுமா என்ன? மிக விரைவில் அமுலியஸை கொன்று மீண்டும் தன் தாத்தாவை அரசனாக்கி விடுகிறார்கள் இரட்டையர்கள். நுமிடோருடன் சிறிது நாட்கள் தங்கி அரசவை நேர்த்திகளையும் அரசியல் நுணுக்கங்களையும் கற்று கொண்டு, தமக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க தாத்தா ஆசியுடன் டைபர் நதிக்கரையில் இருக்கும் சொந்த ஊர் நோக்கி போனார்கள் இருவரும்.
ரீமஸுக்கும் ரோமுலஸுக்கும் அங்கு இருக்கும் ஏழு மலைகளில் எந்த மலையில் தங்கள் நகரத்தை உருவாக்குவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ரோமுலஸ் பேலடைன் (Palatine Hill) மலை மீது தன் நகரத்தை உருவாக்க முடிவெடுத்து மலையை சுற்றி ஒரு சுவர் எழுப்பினான். அந்த சுவர்எவ்வளவு எளிதாக எதிரி தாக்குதலுக்கு வீழ்ந்து விடும் என்று காட்ட ரீமஸ் சுவரை தாண்டி குதித்து கிண்டல் செய்தான். ஒரு வேளை அது நடந்தால் தன் நகரின் தாக்குதல் எப்படி இருக்கும் என்று காட்ட ரோமுலஸ் முனையும் போது சகோதரன் ரீமஸை கொன்று விடுகிறான். அதன் பிறகு ரோமுலஸ் தலைமையில் பேலடைன் மலையில் ரோமாபுரி நகரம் உருவாகிறது (பேலடைன் மலையில் ரோமுலஸ் தனக்கு கட்டிய வீட்டிலிருந்து தான் மாளிகைகளை குறிக்கும் ஆங்கில சொல் ‘Palace’ உருவானது).
ரோமுலஸ் ஆட்சி காலத்தில் ரோமாபுரி பல போர்களை தொடுத்து பல நாடுகளை தன் ஆட்சிக்குள் கொண்டு வருகிறது. அதன் பிறகு வந்த மன்னர்களும் ரோமுலஸ் வழி நடக்க, ரோமாபுரி மனித வரலாற்றில் மிகப்பெரிய இடம் பிடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஒரு வேளை இருவரும் ஒரே மலையை தேர்ந்தெடுத்து இருந்தால் ரோமாபுரி வரலாறு மாறி இருக்குமோ? ரீமஸ் ரோமுலஸை கொன்று இருந்தால் ரீமாபுரி உருவாகி இருக்குமோ? ரோமாபுரி பேரரசு உருவானதற்கு பிறகு போர்க்கடவுள் வழி வந்தவர்கள் நாம், போரிடுவதும் சாம்ராஜ்யத்தை பெரிதாக்குவதும் தான் நாம் செவ்வாய்க்கு செய்யும் கடமை என படைவீரர்களை முடுக்கிவிட உருவாக்க பட்ட கதையோ? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆணித்தரமான விடை என்றும் கிடைக்கப் போவதில்லை. இதையெல்லாம் விட அதிகமாக யோசிக்க வைத்த கேள்வி ஒன்று உள்ளது.
இந்த கதைக்கும் இன்னும் பல கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் ( மாமன் அநியாயங்களை அழிக்க அவதாரமெடுக்கும் கண்ணன், தேரோட்டியிடம் வளரும் சூரியனால் குந்தி பெற்றெடுத்த கர்ணன்) உருவாக்கிய கேள்வி -“காலங்கள், தேசங்கள், இனங்கள், நிறங்கள், மொழிகள் வேறுபட்டாலும் மனிதம் ஒன்று தான், அதன் நாயகர்கள் ஒன்று தான். இதை எப்போது உணர போகிறோம்?”
Nice write up! 🙂