Skip to content

ராவணன் பாலம்

தனுஷ்கோடிக்கும் தலைமன்னார்க்கும் நடுவுல இருக்குறது ராமர் பாலம். இது என்ன புதுசா இராவணன் பாலம்? இது எங்க இருக்குன்னு யோசிக்கிறீங்களா? உங்க ஊகம் என்ன?

இல்லை, இல்லை, அங்க இல்லை, இன்னும் கொஞ்சம் வடமேற்கு பக்கமா யோசிங்க. அட அதுவும் இல்லை, இன்னும் கொஞ்சம், விடுங்க நானே சொல்லிடறேன் – வட அயர்லாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் நடுவுல இருக்கு. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீர்களா? அது வந்து ராவணன் படிச்சு முடிச்சதும் தங்கச்சி தம்பிகளுக்கு கல்யாணம் பண்ணி வெக்க, காசு சம்பாரிக்க அயர்லாந்துக்கு போனப்போ, அங்க என்ன ஆச்சுன்னா – அட அதெல்லாம் இல்லைங்க. பேர் வந்ததுக்கு காரணம் வேற, அது எப்படி வந்ததுன்னு பாக்குறதுக்கு முன்னாடி, அந்த பாலத்தோட மகத்துவத்தை கொஞ்சம் பாப்போம்.

அயர்லாந்தோட வடக்கோடில இருக்குற ஆண்ட்டிரிம் கரையில் (Antrim coast) இருந்து தான் இந்த “பாலம்” (The Giant’s Causeway) தொடங்குது. 1986-ல ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO)இந்த பகுதியை உலக பாரம்பரிய தளமா (World Heritage site) அறிவிச்சாங்க. இந்த பகுதி முழுக்க சீரான பலகோண கருங்கற்களை பக்கத்து பக்கத்துல இடைவெளி இல்லாம முறையா அடுக்கி வெச்ச மாதிரி ஒரு பாலமும், பிரம்மாண்டமான தூண்களும் நெறஞ்சிருக்கு. இங்க இருந்து ஸ்காட்லாந்து ஸ்டாப்பா தீவுல இருக்குற பிங்கால் குகை (Fingal Caves) வரைக்கும் இந்த பாலம் இருந்திருக்கலாம்னு நம்பப்படுது (அந்த குகையும் இதே கட்டமைப்புல இருக்குறது காரணமா இருக்கலாம்). இதை கட்டுனது யாரு, எதுக்காக கட்டினாங்க, அதுக்கு அப்பறமா என்ன ஆச்சுங்கிறத பத்தி அந்த ஊரு பெருசுங்க ஒரு சுவாரசியமான கதை சொல்றாங்க. கடந்த 300 வருட புவியியல் ஆய்வு முற்றிலும் வேற அறிவியல் காரணங்களை முன் வைக்குது. விஞ்ஞானத்தை பேசுறதுக்கு முன்னாடி அயர்லாந்து பெருசுங்களோட பாட்டன் பூட்டன் அவங்களுக்கு சொன்ன கதையை இங்க உங்களுக்கு நான் சொல்றேன்.

முன்பொரு காலத்துல அல்ஸ்டர் நாட்டோட ஆண்ட்டிரிம் கரையை பூதாகரமான(giant) மாவீரன் பியான் மேக் கூல் (Fionn Mac Cumhaill அல்லது Finn MacCool) பாதுகாத்து கொண்டு இருந்தான். 

அதே நேரம் கடலுக்கு அந்த பக்கமா ஸ்காட்லாந்து ஸ்டாப்பா (Staffa) தீவை இன்னொரு பூதம் பெண்ணான்டொன்னேர்(Benandonner) பாதுகாத்து கொண்டு இருந்தான். 6 அடி மனுசனுக்கே பக்கத்து ஊர்காரன வம்பு இழுக்காட்டி தூக்கம் வராது. சண்டைக்காகவே பொறந்து வளந்த ரெண்டு பூதமும் சும்மா இருக்குமா? பெண்ணான்டொன்னேர் தினமும் பியான் கிட்ட ஏதாவது ஒரு வம்பு பண்றதும் கலாய்க்கறதுமா இருந்தான். பொறுத்து பொறுத்து ஒரு நாள், பியான் பெண்ணான்டொன்னேர பாத்து நம்ம வடிவேலு மாதிரி “நீ மட்டும் தைரியமான ஆம்பளையா இருந்தா எங்க ஊருக்கு வந்து பாருடா” அப்படினு சவால் விட்றான் (பின்குறிப்பு: இது பொழிப்புரை, வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக்க கூடாது). அதுக்கு பெண்ணான்டொன்னேர் “எனக்கு நீச்சல் தெரியாது, நீ வேணும்னா இங்க வா” அப்படினு பதுங்குறான். ஆஹா, நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு பியான்க்கு ஒரே சந்தோஷம். ராத்திரியோட ராத்திரியா கரைல இருந்த கல் எடுத்து ஐங்கோணமா அறுகோணமா செதுக்கி, தேனடை மாதிரி ஒன்னுக்கொன்னு பக்கத்து பக்கத்துல அடுக்கி ஒரு பாலத்தை ஆண்ட்டிரிம்ல இருந்து ஸ்டாப்பா வரைக்கும் கட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிடறான்.

அடுத்த நாள் காலைல வழக்கம் போல கரைக்கு வந்த பெண்ணான்டொன்னேர் புதுசா ஒரு பாலம் இருக்குறத கவனிக்கிறான். நீச்சல் தெரியாதுன்னு சொன்னதுக்கு பாலத்தை கட்டி சண்டைக்கு கூப்பிடறான், இனிமேலும் சண்டைக்கு போகாட்டி ‘நான் ஒரு மறத்தமிழன் மறஸ்காட் இல்லனு’ நெனச்சிருவான் அந்த பியான் அப்படினு ஆண்ட்டிரிம் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். பெண்ணான்டொன்னேர் எடுத்து வெக்கிற ஒவ்வொரு அடியும் அந்த பக்கம் பூகம்பம் மாதிரி அதிருது. ஊரை காப்பாத்துற கடைமைல இருக்குற நம்ம பியான் என்ன நடக்குதுன்னு பாக்க கரையோரமா போனான். வர்றது பூகம்பம் இல்லை பெண்ணான்டொன்னேர், அது மட்டும் இல்ல அவன் தன்னை விட பலமடங்கு பிரம்மாண்டமா இருக்கான், ஆழம் தெரியாம கல்லை (காலை) விட்டுட்டோம்னு அவனுக்கு புரியுது. இங்க சண்டை போடறத விட, வீட்டுக்கு போய் நிதானமா யோசிச்சு முடிவு பண்ணலாம்னு தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறான் பியான். 

ஊரையே மெர்சலாக்குற தன் புருஷன் அலறி அடிச்சு ஓடி வர்றத பாத்து ஊணா(Oonagh)என்ன ஆச்சுன்னு விசாரிக்க, பியான் நடந்ததை விவரிக்கிறான். மொத்தத்தையும் பொறுமையா கேட்டுட்டு ஊணா சொன்னா “அட இவ்வளவு தானா, நான் பாத்துக்குறேன், நீங்க நான் சொல்றபடி செய்ங்க போதும்”. பியண்ணா (Fianna) படையோட தளபதியா இருந்தாலும், பொண்டாட்டி சொல்றத கேட்டு தானே ஆகணும். பியான் ஊணா சொன்னதை இம்மி பிசகாம அப்படியே செய்யறான். பெண்ணான்டொன்னேர் ஒரு வழியா பியான் வீட்டை கண்டுபிடிச்சு வந்து கதவை தட்டுறான். கதவை திறக்கிற ஊணாகிட்ட பெண்ணான்டொன்னேர் கர்ஜிக்கிறான் “தைரியமான ஆம்பளையா இருந்தா எங்க ஊருக்கு வந்து பாருடானு உன் புருஷன் சொன்னான், நான் வீட்டுக்கே வந்துட்டேன்,எங்க அவன்? நான் இன்னைக்கு ஒரு கை பாக்காம போறதில்லே”. இது ஒரு தினசரி சம்பவம் மாதிரி அலட்டிக்காம ஊணா சொன்னா “அவர் வேட்டைக்கு போயிருக்காரு, உள்ள வந்து ஒரு வாய் குடிச்சிட்டு ஓய்வெடுங்க, அவர் வந்ததும் சொல்றேன்”. நடந்த அசதி தீர, ஊணா குடுத்த தேன் கள் (honey beer) குடிச்சிட்டு ஒரு நாற்காலியில சரியிறான் பெண்ணான்டொன்னேர். 

கொஞ்சம் நேரம் கழிச்சு ஊணா ரெண்டு தட்டுல சாப்பாடு எடுத்துட்டு வந்து தர்றா – ஒன்னு அவளோட குழந்தைக்கு, இன்னொன்னு ஸ்காட்லாந்து விருந்தாளிக்கு. அசுர பசியில இருந்த பெண்ணான்டொன்னேர் வேக வேகமா ஒரு கடி கடிச்சதும் பல் மூணு நொறுங்கிடுது. “சின்ன குழந்தை எவ்வளவு சமத்தா சாப்பிடுது, தடிமாடு மாதிரி வளந்து இருந்தும் இன்னும் சாப்பிட தெரியலியே” அப்படினு ஊணா சலிச்சிக்கிறா. பெண்ணான்டொன்னேர் ஒண்ணும் புரியாம, குழந்தையை எட்டி பாக்குறான். அந்த இளம்பிஞ்சு அவன் உயரத்துல பாதி இருக்கு, கை கால் எல்லாம் இரும்பு மாதிரி இறுகி போய் இருக்கு. ‘குழந்தையே இப்படி இருந்த அப்பன் எப்படி இருப்பான்?’ அப்படினு லேசா பொறி கலங்குது அவனுக்கு. பயத்தை முடிஞ்சா அளவுக்கு வெளிக்காட்டாம “இன்னைக்கு நாள் நல்ல இல்ல, இருட்ட வேற ஆரம்பிச்சிருச்சு, வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும். இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு உன் புருஷன் கிட்ட சொல்லிடு” அப்படினு சமாளிச்சிட்டு தறிகெட்டு ஓட்றான் பெண்ணான்டொன்னேர். போற போக்குல, எங்க பியான் தேடி வந்துடுவானோன்னு, பாலத்தையும் இடிச்சி நொறுக்கிட்டே போறான்.

கடைசி வரைக்கும் பெண்ணான்டொன்னேர் ரெண்டு விஷயத்தை தெரிஞ்சுக்கவே இல்லை. அது என்னன்னா 
1) குழந்தைக்கு குடுத்த சாப்பாட்டுல இரும்பு துண்டு ஊணா ஒளிச்சு வெக்கல.
2) இது தான் ரொம்ப முக்கியமான ஒன்னு – அந்த குழந்தையே பியான் தான். குழந்தை மாதிரி பியானுக்கு வேடம் போட்டு பெண்ணான்டொன்னேர ஏமாத்திட்டா விவரமான ஊணா.

என்ன தான் பொண்டாட்டியோட புத்திசாலித்தனத்தால தப்பிச்சாலும், ஊருக்குள்ள கெத்த காப்பாத்தணும், அதே சமயத்துல பெண்ணான்டொன்னேருக்கு பயம் போய்டாம பாத்துக்கணும் (இல்லாட்டி இது கள்ளாட்டம் மோதலை மொதல்ல இருந்து ஆரம்பிப்போம்னு வந்து நிற்பானே). அதனால பின்னாடியே கொஞ்சம் இடைவெளி விட்டு தொறத்திட்டு போறான் பியான். ரொம்ப கிட்ட போனா உண்மை வெளிய வந்திடும் இல்லையா. போற போக்குல அப்படி ஒருகை நெறைய பூமியை பேத்தெடுத்து பெண்ணான்டொன்னேர் மேல வீச, அது கொஞ்சம் தவறி அயர்லாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் நடுவுல விழுந்திடுது. அது  தான் இன்னிக்கு ஐல் ஆஃப் மேன்(Isle of Man) தீவாயிடுச்சு. ஒரு தீவு அளவுக்கு பூமியை பேத்து எடுத்தா எவ்வளவு பெரிய பள்ளம் உருவாகி இருக்கும்? அந்த பள்ளம் முழுக்க தண்ணி ரொம்பி இன்னைக்கு அயர்லாந்தோட பெரிய குளமாயிடிச்சு (Lough Neagh). 

இன்னும் என்ன ‘உம்’ கொட்டிட்டு இருக்கீங்க? கதை முடிஞ்சு போச்சு. ஓ, ராவணன் பாலம்னு எப்படி பேர் வந்ததுன்னு இன்னும் சொல்லையோ? அதுக்கு முன்னாடி புவியியல் ஆய்வு பத்தி பேசிடுவோம். 300 வருடம் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. பாவம், ஒரு 30 நொடிகள் அவங்களுக்காக செலவு பண்ணுவோமே! 

5 – 6 கோடி வருடங்களுக்கு முன்னாடி, ஆண்ட்டிரிம் கடுமையான எரிமலை சீற்றங்கள சந்திச்சது. வெளியே துப்பப்பட்ட எரிமலை குழம்பு கொஞ்சம் கொஞ்சமா குளிர்வடைய ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன துண்டுகளா உடைய ஆரம்பிச்சது. நம்ம ஊர்ல மழை பேஞ்சு முடிஞ்சதும் சேறு அங்க அங்க தேங்கி நிக்கும். ரெண்டு மணி நேரத்துல பட்டய கெளப்புர வெயில் தண்ணிய மொத்தமா உறிஞ்சு முடிச்சதும், மிச்சம் இருக்குற மண்ணு சின்ன சின்ன துண்டா உடைஞ்சு இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா? அதே மாதிரி தான், என்ன இது எரிமலை குழம்பு குளிர்ச்சி அடையுது ஆனா முடிவு ஒன்னு தான். 3 வருடம் படிச்சத 3 மணி நேர தேர்வுல எழுதுற மாதிரி, 300 வருட ஆராய்ச்சியை 3 வரில சொல்ல முயற்சி பண்ணி இருக்கேன். இதுக்கு மேல சொன்னா கேக்குற நீங்களும் தூங்கிடுவீங்க, சொல்லி முடிக்கிறதுக்குள்ள நானும் தூங்கிடுவேன். இந்த ஆராய்ச்சி பத்தி இன்னும் தெரிஞ்சுக்கனும்னா இணையத்துல நம்ம சகா கூகுளை கேட்டு பாருங்க,நெறைய சொல்வாப்ல.

என்ன தான் 300 வருடம் ஆராய்ச்சி பண்ணி உண்மைய கண்டுபிடிச்சு சொன்னாலும், எனக்கென்னவோ பெருசுங்க சொன்ன கதையும், கதையோட நெறியும் தான் பிடிச்சிருக்கு. கதையை கேட்டும் படிச்சும் வாழ்க்கையை வாழ கத்துகிட்ட சமூகம் நம்மளோடது. அதுல இருந்து வந்துட்டு ஒரு நல்ல நெறி கதையை மறுக்க முடியுமா? அதுக்காக அறிவியலை மறுக்கிறேன்னு அர்த்தம் இல்லை. அறிவியல் நமக்கு உண்மையை கத்துக்குடுக்குது, கதை வாழக்கையை. ரெண்டுல எதை நீங்க தேர்வு செஞ்சாலும், அடுத்ததை மறுக்காதீங்க அது தான் என் தாழ்மையான கருத்து.

சரி, கடைசியா நம்ம பாலத்தோட பேர் காரணத்துக்கு வருவோம். அந்த பதிலை சொல்றதுக்கு முன்னாடி என்னோட இந்த கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க.

1) Giant – இதுக்கு நேரடியான தமிழ் வார்த்தை இருக்கா? பூதம், ராட்சதன், பிரம்மாண்ட மனிதன் இந்த மாதிரி சில பரிந்துரைகள் நண்பர்கள்கிட்ட இருந்து வந்தது ஆனா ஏனோ இதுக்கு சரியான பொருத்தமா தெரியல. இந்த வார்த்தை எல்லாம் எதிர்மறையாவே நாம பயன்படுத்துறதால இருக்கலாம். உங்களுக்கு நல்ல வார்த்தை தெரிஞ்சா கீழ தட்டி விடுங்க.

2) இந்த கதையை கேட்டதும், எனக்கு முதல்ல என்ன தோணுச்சுன்னா, இதை சின்ன வயசுல எங்கயோ கேட்டு இருக்கோமேன்னு தான். பாட்டி, சித்தி, அம்மா, மாமா சொல்லி கேட்டேனா இல்ல அம்புலிமாமா புத்தகத்துல படிச்சேனானு தெரியல ஆனா நிச்சயமா இது பழைய நினைவு பெட்டகத்துல இருந்ததுங்கிறது உறுதி. நீங்களும் இதை எங்கயாவது கேட்டு இருந்தா கொஞ்சம் எங்கன்னு தயவு செஞ்சு எனக்கும் சொல்லுங்க.

இராவணன் பாலம்னு ஏன் பேர் வந்துச்சுன்னா… உண்மையை சொல்லனும்னா அந்த பாலத்துக்கு அப்படி ஒரு பேர் சத்தியமா இல்லைங்க. இந்த வலைப்பதிவை தவிர வேற எங்கயும் எனக்கு தெரிஞ்சு அந்த பேர் பயன்படுத்தப்பட்டது இல்லை. அந்த பெயரை நான் பயன்படுத்துனதுக்கு ‘Giant’ வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததும், ராமாயணத்துல வர்ற மாதிரி போரிட பாலம் கட்டுனாங்க அப்படிங்கிற நேரடி சமானமும் தான் (ஏற்கனவே ராமர் பாலம் இருக்குறதால இது ராவணன் பாலம்). திட்டுறதா இருந்தாலும், மன்னிச்சு விடுறதா இருந்தாலும், கீழ இருக்குற கருத்து பெட்டி பாரபட்சம் பாக்காம வாங்கிக்க தயாரா இருக்கு. இனி உங்க நேரம்… 

Published inEuropeNorthern Ireland

One Comment

  1. மோகன் ராஜ் மோகன் ராஜ்

    நண்பரின் நண்பரே, நண்பரே உங்களுடைய எழுத்து நடை குழந்தைகளுக்கு கதை சொல்வது போல சுவாரசியமாக உள்ளது, நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் புதிதாக எந்த ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளும் எவர் ஒருவரும் குழந்தைகள்தான் அவர்களுக்கு சுவாரசியமாக சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன், சில பேர் என்ன இவர் சிறு குழந்தைகளுக்கு சொல்வதுபோல் இருக்கிறது என்று நினைத்தாலும் அது பரவாயில்லை. இதை மனதில் வைத்துதான் மதன் அவர்கள் ஒரு வரலாற்று புத்தகத்தை குழந்தைக்கு கதை சொல்வது போல் எழுதியுள்ளார் அது உங்களுக்கும் தெரிந்ததே?! அதுதான் வந்தார்கள் வென்றார்கள்! அதைப்போல் நீங்களும் இந்த பயண தொகுப்புகளை சுவாரசியமாக எழுதி புத்தகமாக பிரசுரிக்கவும் நான் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்..

Comments are closed.