தலப்பா பூ??? வசூல்ராஜால கமல் சொல்லுவாரு “தெணிக்கும் பேசுற பாஷை தமிழ், அதுல எனக்கு வேணும்னும்போது ஒரு வார்த்தை கிடைக்க மாட்டேங்குதே”. இப்போ என் நிலைமையும் அது தான், அதனால நானே ஒரு பேர் உருவாக்கிக்கிட்டேன் (கண்டிப்பா இந்த பேர் காரணத்தையும் சொல்றேன் நீங்களே அது பொருந்துதான்னு முடிவு பண்ணிக்கோங்க). “குமாரி, என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது, குமாரி” – அந்நியன் படத்துல ஒரு பூந்தோட்டத்துல பாட்டு வருமே ஞாபகம் இருக்கா? அந்த பூ தாங்க தலப்பா பூ (Tulips). இந்த பதிவுல நான் பேச போறது அந்த பூவை பத்தியும், அந்த பூவை வளக்குற பிரபலமான கூகேன்ஹாப் தோட்டம் (Keukenhof Gardens) பத்தியும், நெதர்லாந்துல ஒரு பெரிய கூட்டம் இந்த பூவால எப்படி நடு தெருவுக்கு வந்தாங்கங்கிறத பத்தியும், அதுல நம்ம கத்துக்க வேண்டிய இன்னமும் கத்துக்க மறுக்கிற பாடத்தை பத்தியும் தான்.
நெதர்லாந்து நாடு நம்ம இயக்குநர் பாக்யராஜ் மாதிரி. எவ்வளவோ நல்ல விஷயங்கள படத்துல சொல்லி இருந்தாலும் சட்டுனு ஞாபகத்துக்கு வர்றதுஅந்த முருங்கைக்காய் தான். நெதர்லாந்து முருங்கைக்காய் ஆம்ஸ்டெர்டாம் (விஷயம் தெரிஞ்சவங்களுக்கு இதுக்கு மேல சொல்ல தேவை இல்ல, தெரியாதவங்க தெரிஞ்சிக்காமலே இருக்குறது நல்லது). ஆம்ஸ்டெர்டாம் தாண்டி அந்த நாட்டுல கலாச்சார வரலாறு சிறப்புமிக்க இடங்கள் நெறைய இருக்கு. அதுல ஒண்ணு தான் இந்த கூகேன்ஹாப் தோட்டம் (Keukenhof Gardens). ஆம்ஸ்டெர்டாம்ல இருந்து 30 நிமிட தூரத்துல இருக்குற லீஸே (Lisse) ஊருல 32 ஹெக்டர் (3,444,451 சதுரடி – தமிழில் வேற சுலபமான கணக்கீடு தெரிஞ்சா சொல்லுங்க, உதவியா இருக்கும்) நிலப்பரப்புல 8 மாச கடின உழைப்புல உருவாக்கின 70 லட்சத்துக்கு மேல இருக்குற பல வண்ணப்பூக்கள பாக்கணும்னா பொதுவா மார்ச் கடைசி வாரத்துல இருந்து மே பாதி வரைக்கும் மட்டும் தான் முடியும். ஜூன் மாசத்துல இருந்து அடுத்த வருசத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிச்சிடும். வாய்ப்பு கெடச்சா ஒரு முறை கண்டிப்பா போய் பாக்க வேண்டிய இடம் இது.
ஆயிரக்கணக்கான பூக்கள் இருக்கும் போது தலப்பா பூ நெதர்லாந்துல பிரபலமாக ஒரு சுவாரசியமான காரணம் இருக்கு. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னாடி ஐரோப்பா கண்டத்துல தலப்பா பூவை யாரும் பாத்தது கிடையாது. அதுக்கு முன்னாடி இந்த பூ துருக்கி பேரரசோட (Ottoman Empire) செல்வாக்கின் அடையாளம். துருக்கி பேரரசர்கள் தோட்டத்துல மட்டுமே வளர்க்கப்பட்ட பூ, 1500-களில் புனித ரோமாப் பேரரசு (Holy Roman Empire) தூதர் மூலமா வியன்னாக்கு வந்து சேர்ந்தது. துருக்கியர்கள் கட்டுற தலைப்பாகை மாதிரி இருந்ததால அதற்கு நிகரான வார்த்தையான துலிப்னு (Tulip) இந்த பூவுக்கு பேர் வெச்சாங்க (அதே காரணத்துக்காக தமிழ் பேர் ‘தலப்பா பூ’, சரியா?). அரச மாளிகையின் தோட்டத்துலமட்டுமே வளர்ந்த பூ என அறிமுகமானதால ஆரம்பத்துல இருந்து இதை ஆடம்பரத்தின் அடையாளமா பாத்தாங்க ஐரோப்பியர்கள்.
கரோலஸ் க்ளூசியஸ் (Carolus Clusius) 1593-ல இந்த பூவை நெதர்லாந்துக்கு அறிமுகப்படுத்தினார். ஆம்ஸ்டெர்டாம் ஒரு செல்வாக்கான வணிக துறைமுக நகரமா இருந்த காலம் அது. அந்த ஊரு வணிகர்கள் பல நகரங்களுக்கு இந்த பூவை ஏற்றுமதி பண்ண ஆரம்பிச்சாங்க. பேரரசர்களோட தோட்டத்தை அழகுபடுத்தின பூ நம்ம வீட்டுலயும் இருக்கணும்ன்னு பணக்காரங்க பூக்கடை முன்னாடி வரிசை கட்ட ஆரம்பிச்சாங்க. வருசத்துல ரெண்டு மாசம் மட்டுமே வளருகின்ற பூங்கிறதால தேவைக்கு ஏற்ற அளவுக்கு பூ கெடைக்கல. “பக்கத்து வீட்டு பணக்காரன் வாங்கிட்டான், நம்ம வாங்கலைன்னா எப்படி? என்ன செலவு ஆனாலும் பரவாயில்ல, வாங்கியே தீரணும்” அப்படினு ஒரு கூட்டம் கெளம்பிடிச்சு. அந்த பூவோட உண்மையான மதிப்பு (Intrinsic value) ரொம்ப கம்மியா இருந்தாலும் மக்களோட பகட்டு கௌரவ தேவையால சந்தை மதிப்பு (Extrinsic Value) பல மடங்கு ஏறிடுச்சு.
ஒரு பூ அப்படியென்ன பெருசா விலை ஏறி இருக்கப்போகுதுன்னு சாதாரணமா எடை போட்டுடாதீங்க. 1633-ல் செம்பர் அகஸ்டஸ்னு (Semper Augustus) ஒரு தலப்பா பூ ரெண்டு வாங்க கிட்டதட்ட 11000 கில்டர்கள் (Guilder) தேவைப்பட்டுச்சு. அந்த ரெண்டு பூ வாங்குற காசை வெச்சு நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டெர்டாம்ல ஒரு ஆடம்பர அடுக்கு மாடி வீடு வாங்கிட்டு, மிச்சம் இருக்குற காசுல சொந்த பந்தத்தை எல்லாம் கூப்பிட்டு புது வீட்டுல சோறு போட்டு கெத்தை காட்டி இருக்கலாம். ஆனாலும் வந்து சாப்பிட்டுட்டு “என்ன வீடு வாங்கி என்னப்பா, அழகுக்கு ஒரு செம்பர் அகஸ்டஸ் கூட வாங்கி வெக்கலையே” அப்படினு வருத்தப்பட்டு சொல்லி இருப்பாங்க. இன்னொரு வகை தலப்பா பூ வைசிராய் அதே நேரத்துல சராசரியா 2500 கில்டர்கள் வரை விலை போச்சு. இந்த வகை பூக்கள் ரெண்டு நிறத்துல இருக்கும் (சிவப்பு மற்றும் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள்), அதே சமயம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. அதனால தான் யானை விலை, மாளிகை விலை. மத்த வகை தலப்பா பூக்கள் இந்த அளவுக்கு விலை போகலைனாலும் நடுத்தர மக்கள் கைக்கு எட்டாத இடத்துல தான் இருந்தது.
நாளுக்கு நாள் பூ விலை எறிகிட்டே போனதால நெறைய வியாபாரிகள் இந்த பூவை வாங்கி வித்து நெறைய சம்பாரிச்சாங்க. இவ்வளவு சுலபமா வியாபாரிகள் சம்பாரிக்கிறத பாத்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமா இந்த வியாபாரத்துல இறங்க ஆரம்பிச்சாங்க. எங்க போனாலும் எப்படி பக்கத்துக்கு வீட்டுக்காரன், தூரத்து சொந்தக்காரன், கூட வேலை பாக்கறவன் ஆயிரக்கணக்குல இந்த பூ வித்து சம்பாரிச்சான் அப்படிங்கிறது தான் சூடான தலைப்பா இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா இந்த வியாபாரம் வியாதி மாதிரி நெதர்லாந்து முழுக்க பரவ ஆரமபிச்சது. மக்கள் வீடுவாசல் எல்லாம் அடகுவெச்சு, வித்து இந்த பூவை வாங்குனாங்க.நெறைய பேர் வாங்க ஆரம்பிச்சதாலும், வருசத்துல ரெண்டே மாசம் தான் பூக்கிறதாலும் ரொம்ப சீக்கிரமே தட்டுப்பாடு ஆயிடுச்சு. இந்த தட்டுப்பாடு அது பங்குக்கு கொஞ்சம் விலை ஏத்தி விட்டுச்சு. ரெண்டு மூணு வருஷம் அமோகமா நடந்த இந்த வியாபாரத்தால் 1637-ல், முன்னாடி சொன்ன தலப்பா பூ தல செம்பர் அகஸ்டஸ் ஒரு பூ விலை 10000 கில்டர்கள் வரை போயிடுச்சு.
ஏற்றம்னு ஒன்னு இருந்தா இறக்கம்னு ஒன்னு இருந்தே தீரும் இல்லையா. 1637-ல் ஒரு பெரிய வியாபாரி பேசுன விலை குடுத்து வாங்க முடியாதுன்னு மறுத்திட்டாரு. இந்த விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவ, சொத்துப்பத்து வித்து இந்த பூ வாங்க ஒப்பந்தம் போட்டவன் எல்லாம் அடிச்சு புடிச்சு ஒத்துக்கிட்ட விலைக்கு வாங்க முடியாதுனு மறுத்துட்டாங்க. இதனால திடீர்னு சந்தைல தேவையை விட பூ அதிகமாயிடுச்சு. தட்டுப்பாடு கொறைஞ்சதால ஏற்கனவே இறங்கிக்கிட்டு இருந்த விலை இன்னும் வேகமா சரிய ஆரம்பிச்சது. ரொம்ப சீக்கிரமாவே சந்தை விலை கிட்டத்தட்ட உண்மை விலைக்கு சமமா ஆயிடுச்சு. யானை விலை குடுத்து வாங்கினவன் எல்லாம் ஒரே ராத்திரில நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. சில வருசத்துக்கு ஒரு முறை திரும்ப வர்ற பொருளாதார குமிழிக்கெல்லாம் (Economic Bubble) ஆரம்பம்னு இதை சொல்லலாம். ஆனாலும் இப்போ வரைக்கும் நாம தான் எதுவும் கத்துக்கவே இல்ல. 1600-களில் தலப்பா பூ, 2000-களில் இணைய குமிழி (Y2K), நடுவுல வந்ததெல்லாம் கணக்கு எடுக்க நேரம் இல்ல. ஆனா அன்னைக்கு போலவே இன்னைக்கும் கண்ணை மூடிக்கிட்டு ஆட்டுமந்தை மாதிரி கூட்டம் கூட்டமா போய்கிட்டே தான் இருக்கோம்.
தங்கம், வைரம் இன்னும் எவ்வளவோ பொருட்களை அதோட உண்மையான விலைக்கு பதிலா ஊதி பெருசாக்கப்பட்ட சந்தை விலைல தானே வாங்கிகிட்டு இருக்கோம். தங்கத்தை கூட விடுங்க – பூமிக்கு வெளியே ஒரு நட்சத்திரம் வெடிச்சு சிதறி (Super Nova) அந்த அலைகள் தங்கத்தை பூமியில நரம்பு நரம்பு புதைச்சு வெச்சது, அதை முதலீடா, சேமிப்பா கூட பயன்படுத்திக்கலாம். ஆனா இந்த பளபள கரித்துண்டு இருக்கே, அதாங்க
வைரம் அதுக்கு ஏன் தான் இவ்வளவு மரியாதையோ? அடுப்புக்கு போடுற கரித்துண்டு (Coal), எழுதுற கரிக்கோல் (Graphite in Pencil), வைரம் எல்லாமே வெறும் கரி (Carbon) தான். உண்மையான விலை மட்டும் வெச்சு எடைபோட்டு பாத்தா, கரிக்கோல், கரித்துண்டு அதுக்கு அப்பறம் தான் வைரம். உண்மையை சொல்லனும்னா செம்பர் அகஸ்டஸும் வைரமும் கிட்ட தட்ட ஒண்ணு தான். செம்பர் அகஸ்டஸ் பெருமைக்கு காரணமான ரெட்டை நிறம் ஒரு கிருமி தாக்குதலால் ஏற்பட்டது – அதாவது நோய்வாய்ப்பட்ட பூ. வைரமும் அப்படி தான் கரியாவோ கரிக்கோலாவோ ஆக முடியாத கரி தான் வைரம். செம்பர் அகஸ்டஸ் சாகுபடி பண்ண பல்லாயிரம் பேர் சாகல ஆனா வைரத்தை எடுக்க எத்தனை பேர் குடும்பத்தை, நண்பர்களை, உயிரை குடுத்து இருக்காங்கனு கணக்கு எடுத்து மாளாது.
1880-களில் உருவான டீ பியர்ஸ் (De Beers) வைர சுரங்க நிறுவனம் தான் இன்னைக்கு இருக்குற வைர வன்முறைக்கும் பல லட்சம் பேர் இந்த கரித்துண்டை இவ்வளவு விலை குடுத்து வாங்குறதுக்கும் காரணம். சுரங்கத்தில இருந்து எடுக்குறதுல இருந்து, அதுக்கான மோகத்தை உருவாக்கி, வீக்க விலைல மக்களை வாங்க வெக்குற வரைக்கும் மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டுல வச்சிருந்தாங்க. அமெரிக்காவில் வைர மோதிரம் குடுத்து தான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கேக்கணும்ங்கிற பழக்கம் இவங்க லாபத்தை அதிகரிக்க உருவாக்குனது தான். இன்னைக்கு இந்த நிறுவனம் பழைய பலத்தோட இல்லைனாலும், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணகர்த்தா அவங்க தான். மேல இருக்குற அந்த வைரம் இவங்க நூற்றாண்டு கொண்டாட்ட ஞாபகர்த்தமா தான் அந்த பேரை (Centenary Diamond) வெச்சாங்க.இந்த வைரத்தோட சிறப்பம்சம் என்னனா இது எந்த வித மாசுபாடும் இல்லாத 100 சதவீத சுத்த வைரமாம். இதை எடுக்க அந்த நிறுவனம் பண்ண சமூக பாதிப்புகளை கணக்குல எடுத்துக்கிட்டா (Blood diamond-னு இணையத்துல தேடி பாருங்க, இல்லை குறைந்தபட்சம் அந்த படத்தையாவது பாருங்க), இந்த வைரம் மட்டும் இல்ல, உலகத்துல எந்த வைரமும் சுத்த வைரம் இல்ல, எல்லாமே ரத்த வைரம் தான். கிம்பர்லி கோட்பாடுகள் இந்த சுரங்க தொழிலோட இருட்டு வேலைகளை சீர்படுத்த தொடங்கி இருக்குறதா சொன்னாலும் அது போய் சேர வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு. இதுல இன்னொரு உறுத்தலான விஷயம் என்னனா, அந்த கோட்பாடுகளை உருவாக்குனது வைர சுரங்க நிறுவனங்கள் தான். பல நாட்டு அரசாங்கங்கள் இதை இப்போ நெறிமுறைப்படுத்த தொடங்கினாலும், ஆட்டுக்கு ஓநாய் பாதுகாப்பா?
தாமிரபரணி தண்ணிக்காகவும் தமிழன் வீரத்தை காட்டவும் பெப்சி கோக்கை தவிர்த்த மாதிரி இந்த உதவாத வைரத்தையும் கை விடலாமே? அடுத்த முறை அம்மா, சகோதரி, காதலி, மனைவி யாருக்காவது வைரம் வாங்க போனீங்கன்னா, ஆப்பிரிக்காவில் பல பேர் கண்ணீருக்கு காரணமான வைரத்தையா அன்பை காட்ட வாங்கி கொடுக்கணும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.வைரத்து மேல மோகம் கொறஞ்சிட்டா, விலை விழும். விலை கொறஞ்சிட்டா, ஆடம்பர அடையாளம் காணாம போகும், லாபம் குறையும். லாபமும் மோகமும் கொறஞ்சிட்டா, அதை தேடி எடுக்க வேண்டிய காரணம் இல்லாம போகும். அங்கோலா, சியரா லியோன் நாடுகளில் மெதுவா அமைதி திரும்பும். நான் மட்டும் வாங்காததால இதெல்லாம் நடந்துடவா போகுதுனு நினைக்காதீங்க. ஒரு வியாபாரி பேசுன ஒப்பந்த விலைக்கு தலப்பா பூ வாங்க மறுத்ததால தான் ஆடம்பர மாளிகையை விட விலையுயர்ந்ததா இருந்த பூ இன்னைக்கு சாலையை அழகு படுத்த பயன்படுத்துற அளவுக்கு இறங்கிடிச்சு. வைரமும் விழும், விழணும், கொஞ்சம் யோசிங்க…